நடிகர் கமல்ஹாசனின் புதிய படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்கத்தின் மூலம் அழியாத முத்திரையைப் பதித்து வரும் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார். பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ போன்ற சிறந்த படங்களை வழங்கிய இவர், சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றார். உணர்வுப்பூர்வமான கதையமைப்பாலும், மனித உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காட்சி அமைப்புகளாலும் தமிழ் சினிமாவில் பெருமதிப்புமிக்க இயக்குநராக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் மூலம் அதிரடி ஆக்ஷன் களத்திலும் தனது அபார திறமையை நிரூபித்துக் காட்டினார்.
இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள எஸ்.யு. அருண்குமார், அடுத்ததாகத் தமிழ் சினிமாவின் பிதாமகனும், நடிப்பின் இலக்கணமுமான உலகநாயகன் கமலஹாசனை இயக்கவுள்ளார். திரையுலகில் புதுமைகளைப் புகுத்துவதில் வல்லவரான கமலஹாசனும், கதையமைப்பில் யதார்த்தத்தையும் விறுவிறுப்பையும் சேர்க்கும் எஸ்.யு. அருண்குமாரும் இணைவதால் இத்திரைப்படம் நிச்சயம் ஒரு வித்தியாசமான மற்றும் ஆழமான கதைக் களத்தைக் கொண்ட படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் சுமார் 15 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
