சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான மற்றும் அதிரடி தகவல்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. தற்போது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK27’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் முதல்கட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் ஏற்பட்ட மிகச் சிறந்த நட்பின் அடையாளமாக, அவருக்கு புத்தம் புதிய ஐபோன் 18 புரோ மாடல் செல்போனை சிவகார்த்திகேயன் பரிசளித்து நெகிழ வைத்துள்ளார். இந்த பரிசைப் பெற்ற இயக்குநர், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு தனது மனமார்ந்த நன்றியைப் பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் உடனடியாக மதுரைக்குக் கிளம்பிச் சென்று ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மதுரையில் நடைபெறவுள்ள இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை 50 முதல் 55 நாட்கள் வரை தொடர்ந்து ஒரே கட்டமாக படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது ‘சேயோன்’ படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகே, வரும் 2027 பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ‘SK27’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், 2027 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு பிரம்மாண்ட வணிகரீதியான திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.
கிராமத்து பின்னணியில் ஆன்மீகமும் வணிக அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகும் ‘சேயோன்’ 2027 கோடைக்காலத்தில், குறிப்பாக மார்ச் இறுதியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதே சமயம் கல்லூரி பின்னணியில் கேங்ஸ்டர் கதைக் களத்தைக் கொண்ட கமர்ஷியல் என்டர்டெய்னரான உருவாகும் ‘SK27’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே 2027-ல் சிவகார்த்திகேயனின் இரண்டு மாஸ் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராகி வருகிறது.
