இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், பிரபல நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான ‘தி பாரடைஸ்’ எதிர்வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பினை விளம்பரப்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக செய்தியாளர் சந்திப்பு மற்றும் விளம்பர நிகழ்வு நடைபெற்றது. இதில் நாயகன் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நட்சத்திர பட்டாளமும் படக்குழுவும்
மைத்ரி மூவிஸ் மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நானியுடன் இணைந்து கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

நானியின் நெகிழ்ச்சியான பேச்சு
நிகழ்வில் பேசிய நடிகர் நானி, தமிழ் சினிமா மீதான தனது காதலை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவு, ஆர்வம், காதல் மற்றும் பிரியம் அனைத்திற்கும் தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேஷன். குறிப்பாக கமல்ஹாசன், மணிரத்னம், பாக்கியராஜ், பாரதிராஜா என பல சாதனையாளர்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் எனது சொந்தத் திரைக் குடும்பத்திற்கு வந்தது போன்ற உணர்வே எழும். தமிழ் ரசிகர்கள் என் மீது காட்டும் பேரன்பின் காரணமாகவே, எனது படங்களுக்கு நானே தமிழில் பின்னணி குரல் கொடுத்து வருகிறேன்.”
மேலும் பேசுகையில், “இதுவரை நான் நடித்த படங்களிலேயே மிகக் கடினமாக உழைத்த படம் ‘தி பாரடைஸ்’ தான். எனது திரையுலகப் பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுவே. வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக ஒரு தரமான சம்பவம் காத்திருக்கிறது. படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் என்னை ‘ஜடல்’ என்ற கேரக்டர் பெயரைச் சொல்லி அழைப்பீர்கள்” என்றார்.
முதல் டிக்கெட் வெளியீடு மற்றும் சிறப்புத் திரையிடல்
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவும், நடிகர் நானியும் உற்சாகமாகப் பதிலளித்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள நானியின் தீவிர ரசிகர்களுக்காக ‘தி பாரடைஸ்’ படத்தின் பிரத்யேகக் காட்சிக்கான முதல் டிக்கெட்டை நடிகர் நானி வெளியிட்டுத் தொடங்கி வைத்தார். இப்படம் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
