விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


ஹாலிவுட் ரீமேக் உரிமையை கேட்ட நிறுவனம்
‘மகாராஜா’ திரைப்படம் இந்தியாவைத் தாண்டி சீனா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளிலும் கவனம் பெற்றது. குறிப்பாக சீனாவில் படத்தின் வரவேற்பு மற்றும் ஓடிடி தளங்களில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று படத்தின் ரீமேக் உரிமைக்காக தயாரிப்பாளர்களை அணுகியதாக தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் பதிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாகவும், இந்தப் படம் அடுத்த ஆண்டு படப்பிடிப்புக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Matthew McConaughey பெயர் அடிபடுகிறதா?
ஹாலிவுட் நடிகர் Matthew McConaughey, விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
ஆனால், அவரது நடிப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. McConaughey உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கலாம் என்றும், இறுதி நடிகர் தேர்வு மற்றும் ஸ்டுடியோ விவரங்களை சம்பந்தப்பட்ட ஹாலிவுட் ஏஜென்சிதான் உறுதி செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
‘மகாராஜா’ படத்தின் கதை என்ன?
நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அபிராமி மற்றும் சஞ்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
காணாமல் போன தனது குப்பைத்தொட்டியை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் சலூன் கடைக்காரரின் கதையாக தொடங்கும் இப்படம், பின்னர் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களுடன் நகரும் வகையில் உருவாக்கப்பட்டது.
தமிழ் சினிமாவுக்கு முக்கிய மைல்கல்
‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் பெரிய ஸ்டுடியோ மூலம் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் என தயாரிப்பு நிறுவனமான Passion Studios அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் சர்வதேச கவனம் மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், ‘மகாராஜா’ திரைப்படம் 2026-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சஞ்சனா நமிதாஸுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதையும், அனல் அரசு சிறந்த ஆக்ஷன் கொரியோகிராஃபி விருதையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
