கர்நாடக சங்கீதத்தில் கோலோச்சிய பாடகியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவெடுக்கிறது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியாகப் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாஸ் ஆகியோர் கூட்டாகத் தயாரிக்கின்றனர்.


இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா சென்னையில் திரையுலகப் பிரபலங்கள் சூழச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், கிளாப் போர்டு அடித்து படத்தைத் தொடக்கி வைத்தார்.
சினிமா பயணமும், எம்.எஸ். அம்மாவும்
விழாவில் மேடையேறிப் பேசிய கமல்ஹாசன் தன் இளமைக்கால நினைவுகளையும், எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் தனக்கிருந்த தொடர்புகளையும் நினைவுகூர்ந்து பேசினார்: “நான் சினிமாவுக்குக் குழந்தையாக வந்தபோது சினிமாவிலேயே வாழ்க்கை தொடரும் என்பது எனக்குத் தெரியாது. வேடிக்கையாக என் அப்பா என்னை அழைத்து வந்தார், நானும் கலந்துகொண்டேன். பின்பு படிக்கச் சொன்னார்கள், நல்லவேளை படிப்பு வரவில்லை. அதனால் எது புரிகிறதோ அதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன். அப்படித்தான் இசை புரிய ஆரம்பித்தது, ஆனால் அதுவும் பிரமாதமாக வரவில்லை. அதன் பிறகு டான்ஸ் கற்றுக்கொண்டேன். அசிஸ்டண்ட் டான்ஸராக இருந்து, படிப்படியாக அசிஸ்டண்ட் டைரக்டராகி கிளாப் பிடிக்கக் கற்றுக்கொண்டேன். இன்று இந்த மேடையில் மீண்டும் கிளாப் அடித்துள்ளேன்; இந்தச் சுழற்சி முறை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.”
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான காட்ஃபாதராக விளங்கிய இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன், எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவைப் பற்றி டாக்குமெண்டரி எடுப்பதற்காக வந்தபோது அவருக்கு வயது 88. அவருடன் அசிஸ்டண்ட் டைரக்டராக வேலை செய்ய ஆசைப்பட்டேன், ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. அந்த ஏக்கம் இன்று இந்தப் படத்தின் மூலமாகத் தீர்ந்துவிட்டது” என்றார்.
‘ஹே ராம்’ பட அனுபவமும், பான் இந்தியா லேடி சூப்பர்ஸ்டாரும்
எம்.எஸ். அம்மாவின் இசைத் திறமையைப் சிலாகித்துப் பேசிய கமல், “டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா என்னிடம் எம்.எஸ். அம்மாவைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அதன் பிறகே அம்மாவின் பெருமை எனக்குப் புரிந்தது. ‘ஹே ராம்’ படம் எடுக்கும்போது அவரைச் சந்திக்க நேர்ந்தது. ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலை அவர்தான் பாட வேண்டும் என ஒரு ரசிகனாக ஆசைப்பட்டேன். ஆனால், அப்போது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அது முடியாமல் போனது.
எம்.எஸ். அம்மா ஒவ்வொரு மொழிக்கும் அவ்வளவு வித்தியாசம் காட்டிப் பாடியிருக்கிறார். அவர் ஒரு உண்மையான ‘பான் இந்தியா லேடி சூப்பர்ஸ்டார்’!” என்றார்.
ராஷ்மிகா மந்தனாவும், அனிருத்தின் புதிய பரிமாணமும்
எம்.எஸ். அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஷ்மிகா குறித்துப் பேசுகையில், “அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஷ்மிகாவைப் பார்த்து நான் பொறாமைப்படவில்லை. ஏனென்றால், இந்த வேடத்தில் என்னால் நடித்திருக்க முடியாது. தாடியை எடுத்தால் என்னால் ‘அவ்வை சண்முகி’யாக நடிக்க முடியுமே தவிர, எம்.எஸ். அம்மாவாக என்னால் முடியாது. எனக்கு உடல் நடுங்கிவிடும். அதனால், துணிச்சலாகச் செய்யுங்கள்” என வாழ்த்தினார்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் குறித்துப் பேசுகையில், “பாலச்சந்தர் சாருக்கு எப்படி ‘அரங்கேற்றம்’ ஒரு திருப்பத்தைத் தந்ததோ, கே. விஸ்வநாத் சாருக்கு எப்படி ‘சங்கராபரணம்’ ஒரு மாற்றத்தைத் தந்ததோ, அதேபோல் இந்தப் படம் அனிருத்துக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என விரும்புகிறேன். இயக்குநர் கௌதமுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. உயிரை விட உழைப்பைக் கொட்டிப் படம் பண்ணுங்கள். திரைக்கதைக்காக அதிகம் மெனக்கெட வேண்டாம்; ஏனென்றால் எம்.எஸ். அம்மாவே மிகச் சிறந்ததொரு திரைக்கதையை எழுதிவிட்டுத்தான் சென்றுள்ளார், அதை மெருகேற்றினால் மட்டும் போதும்” என்றார்.
ஒருங்கிணைந்த திராவிடக் குடும்பம்
பேச்சின் இறுதியில் திரையுலகின் ஒருங்கிணைப்பு குறித்துப் பேசிய அவர், “இந்தப் படம் எல்லா மொழிகளிலும் ஓட வேண்டும். என்னுடைய படங்கள் தெலுங்கில் ஓடியிருக்கின்றன, அவர்களின் படங்கள் இங்கு ஓடியிருக்கின்றன. நாங்கள் எல்லாம் ஒருங்கிணைந்த திராவிடக் குடும்பம்; இதில் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அது ஒரு நிலப்பரப்பு சம்பந்தப்பட்டது, அதை அரசியலோடு குழப்பிக்கொள்ள வேண்டாம். இசை எல்லாவற்றையும் கடந்தது. இந்தப் படத்தை எடுப்பதற்கு நன்றி; இதனால் இந்தியாவும், தமிழும் பெருமை கொள்ளும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு! காரணம் இதுதான் – விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
