லப்பர் பந்து படத்தின் திரைவிமர்சனம்
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் இன்று (செப்டம்பர் 20) திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் தவிர அட்டக்கத்தி தினேஷ், சுவாஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலசரவணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தினை தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கிறார். கிரிக்கெட் சம்பந்தமான கதை களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. நேற்று (செப்டம்பர் 19) இந்த படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த பலரும் படத்தினை பாராட்டி தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நடக்கும் இந்த கதையில் அட்டகத்தி தினேஷ், கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். அன்பு எனும் ரோலில் கொடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக, விஜய் ரசிகராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாணை கிரிக்கெட் டீமில் சேர்ப்பதற்கு சாதி என்பது தடையாக இருக்கிறது. இருப்பினும் யார் தன்னை சேர்த்துக் கொள்கின்றார்களோ அந்த டீமுக்கு கடைசி சப்ஸ்டியூட்டாக விளையாடி வருகிறார் ஹரிஷ் கல்யாண். அதே சமயம் பேட்டிங்கில் கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷின் மகளை தான் ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஈகோ கிளாஷ் ஆகிவிடுகிறது. அதன் பின்னர் இருவருக்குமான மோதல்களை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாதவண்ணம் தந்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு நல்ல மெசேஜ் உடன் முடித்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு தந்துள்ளது.
அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் தங்களின் நடிப்பை அருமையாக தந்துள்ளனர். இருவருக்கும் இடையிலான டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு படத்தில் பெரிய அளவில் ஒர்கவுட் ஆகியிருக்கிறது. சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். மேலும் காளி வெங்கட், பாலசரவணன் ஆகியோரும் தனக்கான கதாபாத்திரத்தை மிகச் சரியாக பயன்படுத்தி உள்ளனர். அதேபோல் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் கொடுத்துள்ளது. படத்தில் இடம்பெற்ற வசனங்களும் பிளஸ் ஆக அமைந்துள்ளது. அத்துடன் ஒரு சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும் படமானது போர் அடிக்காமல் ஒரு நல்ல படம் பார்த்த அனுபவத்தை தரும் என்பதிலும் குடும்பத்துடன் படத்தை கண்டு ரசிக்கலாம் என்பதில் இந்தவித சந்தேகமும் இல்லை.