இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து இவர் விஜயின் மாஸ்டர் மற்றும் லியோ, கமலின் விக்ரம், உள்ளிட்ட படங்களை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். எனவே லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை படமாக்கி வருகிறார். விரைவில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில், “கூலி திரைப்படம் எல்சியு -வின் கீழ் வராது. இது தனி படமாக உருவாகிறது. ஆறு மாதத்திற்குள் படத்தினை முடிக்க நான் முயற்சி செய்து வருகிறேன். ரஜினி சார் அக்டோபர் 16ல் படப்பிடிப்பில் இணைவார்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ்.
இவரது இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், லியோ போன்ற படங்கள் எல்சியு- வின் கீழுள்ள படங்கள் என்பதும் மாஸ்டர் திரைப்படம் மட்டும் தனி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.