கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ஸ்டார். இந்தப் படத்தை `பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றிப் படத்தை இயக்கிய இளன் இயக்கி வருகிறார். இப்படதின் அறிவிப்பு வெகு நாட்களுக்கு முன்பாகவே வெளியானது. முதலில் படத்தில் ஹரிஸ் கல்யாண் நடிப்பதாக இருந்தது. அதையடுத்து, அவர் படத்திலிருந்து விலகியதால், கவின் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அறிமுக பாடல் காட்சியை பிரமாண்டமாக அரங்கு அமைத்து படமாக்கி உள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்து உள்ளனர். அண்மையில் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது.
இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்டார் படத்தை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.