நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதே சமயம் இவர் தற்போது தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா எனும் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது பேபி ஜான் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ், தனது நண்பர் ஆண்டனி தட்டிலை கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தனக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.