இந்தியன் 3 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தற்போது ‘சண்டியர்’, ‘கல்கி 2’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ திரைப்படமும் ‘இந்தியன்’ படத்தைப் போலவே ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியானது. ஆனால், கடும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் எதிர்கொண்டது. இதுகுறித்துப் பேசிய ஷங்கர், இதுபோன்ற விமர்சனங்களையும் ட்ரோல்களையும் தான் எதிர்பார்க்கவில்லை என்றும், ஊழலுக்கு எதிரான கருத்தை மக்களிடம் சேர்த்தது மகிழ்ச்சிதான் என்றும் கூறியிருந்தார். மேலும், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் கருத்தில் கொள்ளாமல், அடுத்த பணிகளில் கவனிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடத்தப்படும்போதே ‘இந்தியன் 3’ படத்திற்கான காட்சிகள் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இப்போது ‘இந்தியன் 3’ படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி டப்பிங் பணிகளும் சமீபத்தில் தொடங்கியிருப்பதாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் ‘இந்தியன் 3’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கான கூடுதல் படப்பிடிப்பு அட்டவணை மற்றும் கமல்ஹாசனின் தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2027 பொங்கல் தினத்தை படக்குழு டார்கெட் செய்வதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
