மதராஸி பட வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் தான் மதராஸி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜு மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் காதல் கலந்த படமாக வெளியான இந்த படம் சில ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றாலும் சில ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக மிரட்டி இருந்தார். வித்யூத், ஸ்டைலிஷ் வில்லனாக அசத்தி இருந்தார். இருப்பினும் இந்த படத்தில் திரைக்கதை வலுவாக அமைக்கப்படாததால் படமானது பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை கவரவில்லை. அந்த வகையில் இப்படம் தற்போது வரை ரூ.100 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. ‘அமரன்’ திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் இந்த படம் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் நாளுக்கு நாள் வசூலில் சரிவை சந்தித்தன. இது தவிர வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அதன்படி சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத் ஆகியோர் கேக் வெட்டி தங்களின் வெற்றியை கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.