இதிகாசங்களை தழுவி பல படங்களும் சீரியல்களும் உருவாகி வருகின்றன. இது போன்ற எத்தனை படங்கள், எத்தனை சீரியல்கள் வந்தாலும் மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாச கதைகளில் உருவாகும் படங்களுக்கும் சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ஸ்ரீராம ராஜ்ஜியம், ஆதிபுருஷ் , ஹனுமான் உள்ளிட்ட படங்கள் உருவாகியிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக மகாபாரத கதை மிக பிரம்மாண்ட படமாக உருவாக இருக்கிறது. இதனை பிரபல இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை லிங்குசாமி தான்.
இயக்குனர் லிங்குசாமி கடந்த 2001 ஆம் ஆண்டு மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா ஆகியோரின் நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவரின் முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தார். இருப்பினும் இவர் இயக்கிய பீமா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்ததாக லிங்குசாமி பையா 2 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லிங்குசாமி மகாபாரத கதையை படமாக இயக்க உள்ளாராம். இந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் லிங்குசாமி இந்த படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.