மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல் பாடல்… நாளை ரிலீஸ்…
- Advertisement -
மெரி கிறிஸ்துமஸ் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி வட மொழியிலும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தி உச்ச நட்சத்திரமாக உயர்ந்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழில் கொடி நாட்டிய அவர் தற்போது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அசத்தி வருகிறார். இதையடுத்து மும்பை கர் அதாவது மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகினார் விஜய் சேதுபதி. இருப்பினும் அப்படம் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இயைடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் பாலிவுட் ஜாம்பவானுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் ஹிந்தி திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.


தற்போது இந்தியில் கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் தயாராக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஸ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே, மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்திருக்கின்றனர். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, அன்பே விடை எனத் தொடங்கும் இப்பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.