இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் தயாரிக்கும் முதல் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய வலுவான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இளைஞர்களை கவரும் வகையில் உருவான அவரது படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன. குறிப்பாக ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் பெண்களின் வாழ்வியல், போராட்டங்கள் மற்றும் உணர்வுகளை மையப்படுத்திய கதையாக உருவாகிறது. இதில் ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘டியூட்’ படத்திலும் மமிதா பைஜூ, பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நகரில் நேற்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், தொழில்நுட்பக் குழு மற்றும் பிற நடிகர்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
