ராம் சரணின் 17 ஆவது பட ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மெகா பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் கடைசியாக ‘பெத்தி’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக ராம் சரண் தனது 17-வது திரைப்படத்தில் (RC17) கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்குகிறார். ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ராம் சரணை மாறுபட்ட கதாபாத்திரத்தில் காட்டிய சுகுமார், ‘RC17’ படத்திலும் ராம் சரணுக்குப் புதிய கதாபாத்திர வடிவமைப்பைக் கொடுக்கவுள்ளார் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக, ராம் சரண் தனது உடல் அமைப்பை மாற்றி, திரையில் புது அவதாரம் எடுப்பதற்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுத் தயாராகி வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. மேலும் வருகின்ற 2028-ஆம் ஆண்டு மே மாதம் இப்படம் ரிலீஸ் ஆகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
