பாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘டாடி கூல்’ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் ஷாருக்கானும், நடிகை கரீனா கபூர் கானும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடனமாடியுள்ளனர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஜோடி
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் ‘டாடி கூல் (King Version)’ பாடலில் ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் இணைந்து நடனமாடியுள்ளனர்.
இவர்கள் கடைசியாக 2011-ம் ஆண்டு வெளியான ‘ரா.ஒன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே பாடலில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போனி எம் பாடலுக்கு பாலிவுட் டச்!
பிரபல இசைக்குழுவான போனி எம் (Boney M) 1976-ம் ஆண்டு வெளியிட்ட ‘டாடி கூல்’ பாடலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சச்சின் – ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடலை அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் பாடியுள்ளனர். பாடல் வரிகளை குமார் எழுதியுள்ளார். வைபவி மெர்ச்சன்ட் நடன இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
பாடல் வெளியானதைத் தொடர்ந்து, ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பேபோவுடன் மீண்டும் இணைந்துள்ளேன். பாடல் பழைய பாணியில் இருந்தாலும், இன்னும் கூலாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 24-ம் தேதி வெளியாகும் ‘கிங்’
‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வார்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தை கௌரி கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘து மில் ஜாயே’ வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலான ‘டாடி கூல்’ வெளியாகியுள்ளது. ‘கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“எனது திரைப்பயணத்தில் அந்தப் படத்தைத் தவறவிட்டது பெரிய வருத்தம்!” – நடிகர் பரத் மனம் திறந்த பேட்டி
