இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கருப்பு 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் சூர்யா கடவுளாகவும், வக்கீலாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெற்ற ‘கருப்பன்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதே சமயம், படத்தின் இறுதியில் ‘கருப்பு வெர்சஸ் வெள்ளை’ என இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமீபகாலமாகச் சூர்யாவின் 50-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கப் போவதாகவும், அது ‘கருப்பு’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
இது குறித்துப் பேசியுள்ள ஆர்.ஜே. பாலாஜி, “சூர்யா சாருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காக நான் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறேன். கடவுள் அருளால் அந்த வாய்ப்பு மீண்டும் அமையும் என நம்புகிறேன். ஆனால், சூர்யாவின் 49-வது படமா அல்லது 50-வது படமா என்ற நம்பர் விளையாட்டில் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. எப்போது சூர்யா சாருடன் இணைந்தாலும், அவருடைய முந்தைய படத்தை விடச் சிறந்த படமாக அதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் ஆர்.ஜே. பாலாஜி சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -
