நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்துள்ள சிவில் அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா வரும் டிசம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஆஜராகாவிட்டால், வழக்கை அன்றே விசாரித்து முடிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரவி மோகன் – ஆர்த்தி ரவி இடையே விவாகரத்து வழக்கு
நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்தச் சூழலில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனைத் தொடர்புபடுத்தி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, சமூக வலைதளங்களிலும் இருவரைப் பற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் அதிகரித்தன.
பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கத் தடை
ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராகப் பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களைச் சந்தித்ததாகக் கூறி ஆர்த்தி ரவி மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ரவி மோகன் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, தனது செயலுக்காக மன்னிப்புக் கோரி ரவி மோகன் பொது அறிவிப்பு வெளியிட்டார்.
கெனிஷாவுக்கு எதிராக ரூ.1.01 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு
இதற்கிடையே, பாடகி கெனிஷாவுக்கு எதிராகவும் ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேச கெனிஷாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி கெனிஷா வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
மேலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மரியா கிளாட், சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
தற்போது, இந்த வழக்கு தொடர்பாக வரும் டிசம்பர் 3-ம் தேதி கெனிஷா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் ஆஜராகத் தவறினால், அன்றைய தினமே வழக்கை விசாரித்து முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பொது அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளைச் சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி – ஆர்த்தி ரவி எதிர்ப்பு
இதற்கிடையே, நடிகர் ரவி மோகன் தனது குழந்தைகளைச் சந்திக்க குடும்ப நல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆர்த்தி ரவி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், குடும்ப நல நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி ரவி மோகன் இடைக்காலப் பராமரிப்புத் தொகையை வழங்கவில்லை என்றும், குழந்தைகளைப் பராமரிப்பதில் அவருக்கு உண்மையான அக்கறை இல்லை என்றும் ஆர்த்தி ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ரவி மோகன் தனது தோழியுடன் போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் குறிப்பிட்டு, குழந்தைகளைச் சந்திக்க அனுமதி அளித்த குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
