பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1971இல் குட்டி என்ற இந்தி படத்தின் மூலம் அறியப்பட்டவர். அதேசமயம் தனது எட்டு வயதில் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தின் மூலம் தன் குரல் பயணத்தை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் தீர்க்க சுமங்கலி படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன்‘ என்ற மனம் மயக்கும் பாடலை பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து ஒரே நாள் உனை நான், நித்தம் நித்தம் நெல்லு சோறு, பாரதிகண்ணம்மா, கேள்வியின் நாயகனே என எண்ணற்ற பல பாடல்களை பாடியுள்ளார். இவர் பல வகையான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் தன் இனிமையான குரலால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். கிட்டத்தட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய வாணி ஜெயராம் கடந்த 1975, 1980, 1991 ஆம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான மூன்று தேசிய விருதுகளை பெற்றார். அது மட்டுமில்லாமல், 2023 பத்மபூஷன் விருது ஆகியவற்றை வென்று தன் இசை உலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். இவர் கடந்த பிப்ரவரி 4ம் தேதி தன்னுடைய 77 வது வயதில் தனது இல்லத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்ற பட்டத்திற்கே உரிய வாணி ஜெயராமின் உடல் மறைந்தாலும் அவரது குரலாக, அவரின் உருவம் நம் நெஞ்சில் காலத்திற்கும் அழியாத செல்வமாய் இருக்கும். இத்தகைய புகழ்பெற்ற வாணி ஜெயராமின் 78வது பிறந்தநாள் தினமான இன்று அவரை எண்ணி, போற்றி வணங்குவோம்.