தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர் அரங்கத்தில் இன்று (ஜூலை 19) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி இயக்குநர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
இருமுனைப் போட்டி
இத்தேர்தலில் இரண்டு முக்கிய அணிகள் நேருக்கு நேர் களம் காண்கின்றன. இயக்குநர் சேரன் தலைமையில் ‘நம்ம கே. பாக்யராஜ் அணி’, இயக்குநர் வி.சி. குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் அணி’ (மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் பெயரைத் தாங்கிப் போட்டியிடுகிறது). இத்தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 483 பேர் தகுதி பெற்றுள்ளனர். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11:30 மணி நிலவரப்படி 200 வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் நடத்தும் தரப்பு தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.

வாக்குவாதத்தால் பரபரப்பு
தேர்தல் சுமுகமாகத் தொடங்கியபோதிலும், வாக்குப்பதிவு மையத்தில் ‘நம்ம கே. பாக்யராஜ் அணி’ மற்றும் ‘திரைக்கதை மன்னன் அணி’ ஆகிய இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தேர்தல் நடக்கும் அரங்கில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்தத் தேர்தலில் ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியின் சார்பில் துணைத் தலைவர் பதவிகளுக்குப் பிரபல இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
”பாக்யராஜ் இப்போது பொதுச் சொத்து!” – இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி
தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், இந்தத் தேர்தல் குறித்தான தனது கருத்துக்களையும் தர்மசங்கடங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து அவர் பேசியதாவது, ”இது ஒரே குடும்பத்திற்குள் யார் பொறுப்பை ஏற்பது என்பது போன்ற தேர்தல் தான். மற்றபடி இங்கு யாருக்கும் பெரிய தகராறு எல்லாம் இல்லை. இத்தேர்தலில் என்னுடைய உதவியாளர் சேரன் போட்டியிடுகிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டு அணிகளிலுமே எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் யாருக்கு வாக்களிப்பது என்பதில் ஒரு தர்மசங்கடம் இருந்தது உண்மைதான். இருப்பினும், சங்கம் மற்றும் எழுத்தாளர்களின் நலனுக்காக யார் உண்மையாக வேலை செய்வார்களோ அவர்களுக்கு என் வாக்கினைச் செலுத்தியுள்ளேன். ஏற்கனவே கே. பாக்யராஜ் அவர்கள் தலைவராக இருந்தார். தற்போது மீண்டும் அவர் போட்டியிடவிருந்த நிலையில் அவர் மறைந்துவிட்டார். அதனால், அவருடைய அனுதாப ஓட்டுகளைப் பெறுவதற்காக (Sympathy) இரு அணிகளுமே அவருடைய பெயரைத் தங்களது அணிக்கு வைத்துள்ளார்கள். பாக்யராஜ் ஒரு மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர். அவர் இப்போது பொதுச் சொத்தாகிவிட்டார், யார் வேண்டுமானாலும் அவர் பெயரைப் பயன்படுத்தலாம்.” என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளாா்.
