டெஸ்ட் பட ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.
மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க சசிகாந்த் இதனை எழுதி, இயக்கியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன் இதற்கு இசை அமைக்க விராஜி சிங் கோஹில் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்த நிலையில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தில் இருந்து டீசரும் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது போல் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் மூவருக்குமே அவரவர் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறிக்கோள் இருக்கிறது. அதில் ஏற்படும் பிரச்சனைகளை இணைக்கும் புள்ளியாக டெஸ்ட் மேட்ச் இருப்பது போன்று காட்டப்படுகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தி உள்ளது.