Homeசெய்திகள்சினிமாதளபதி 69 தான் இறுதி திரைப்படம்... நடிகர் விஜய் முடிவு...

தளபதி 69 தான் இறுதி திரைப்படம்… நடிகர் விஜய் முடிவு…

-

தளபதி 69 தான் தான் நடிக்கும் இறுதி திரைப்படம் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

கோலிவுட்டே கொண்டாடும் நாயகன் நடிகர் விஜய். தமிழில் மட்டுமே திரைப்படங்கள் நடிக்கும் விஜய்க்கு, தமிழ் மொழியைத் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்திந்திய மொழிகளிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. காதல், காமெடி, ஆக்‌ஷன் என சிறந்த கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய்க்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

கடந்த ஆண்டு லியோ படத்தை கொடுத்த நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு தி கோட் என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜய் 69-படத்திலும் கமிட்டாகி உள்ளார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று வைத்து கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதை அடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் பணிகளை தொடர உள்ளதால், தளபதி69 தான் விஜய் நடிக்கும் இறுதி படம் என்றும் அறிவித்துள்ளாராம். ஒரு பக்கம் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர் படம் நடிக்காததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

MUST READ