விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 3 திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகி, தனது வித்தியாசமான கதைத்தேர்வுகள் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் 2முத்திரை பதித்து வருபவர் விஜய் ஆண்டனி.
இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ‘அப்பா குட்டி’ படம் குறித்துப் பேசிய விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு மெகா அப்டேட்டையும் பகிர்ந்து கொண்டார்.
விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த மெகா ஹிட் ஃபிரான்ச்சைஸின் தொடர்ச்சியாக தற்போது ‘பிச்சைக்காரன் 3’ உருவாகவுள்ளது.
மெட்ரோ மற்றும் ‘கோடியில் ஒருவன்’ படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ள ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை வரும் 2027 ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக விஜய் ஆண்டனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தகவலோடு ‘பிச்சைக்காரன் 3’ படத்தின் அதிரடி அப்டேட்டும் வெளியாகியுள்ளது விஜய் ஆண்டனி ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தியுள்ளது.
