விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்படும் என தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டி வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையில் பாலிவுட்டில் மெரி கிறிஸ்மஸ் எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே, சஞ்சய் கபூர் மற்றும் பலர் நடிக்கின்றனர். சைக்காலஜிக்கல் திரில்லர் கதை களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இதனை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே டிசம்பர் 8ம் தேதி வெளியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் மாதத்தில் கேப்டன் மில்லர், டங்கி, சலார் உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் கடும் போட்டி நிலவுகிறது. அதனால் மெரி கிறிஸ்மஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.