பெரும் வெற்றியைப் பெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில், கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேது உள்ளிட்டோர் தொடரும் நிலையில், இவர்களுடன் புதிதாக மாளவிகா மோகனன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இது 100-வது படமாகும். இப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாகத் திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசினார்.
“கடந்த 3 வருஷமா ரசிகர்களை ரொம்ப படுத்திட்டேன்!” – கார்த்தி ஓபன் டாக்
விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, தனது முந்தைய படங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு குறித்துக் கூறியதாவது: “நான் என்ன செய்தாலும் என்னை முழுமையாக ஆதரிப்பது என் ரசிகர்கள்தான். கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு பரிசோதனை முயற்சிகளைச் செய்து அவர்களை ரொம்பவே படுத்திவிட்டேன் என்று எனக்குத் தெரியும். ‘ஜப்பான்’ படம் பண்ணினேன்; ராஜ்முருகன் சாருடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் அந்தப் படத்தில் நடித்தேன். ஆனால், படம் நான் நினைத்த மாதிரி வரவில்லை. அந்தப் படத்தைப் பார்த்தபோது, ‘இது மாதிரி அல்லவா ஜப்பான் வந்திருக்க வேண்டும், தவறிவிட்டோமே’ என்று தோன்றியது.

“மெய்யழகன் ஒரு காவியம்; நலனுடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம்”
இதனைத் தொடர்ந்து, துளியும் ஆக்ஷன் இல்லாத ‘மெய்யழகன்’ படத்தில் நடித்தேன். பொதுவாக நமது படங்களுக்கு ஆக்ஷன் தான் பெரிதும் பிடிக்கும் என்றாலும், அந்தச் கதை ஒரு காவியம் போன்றது. தமிழ் சினிமாவில் அத்தகையதொரு படம் இருக்க வேண்டும் என்று நினைத்தே அதில் நடித்தேன். தற்போது அந்தப் படத்தையும் நீங்களும் கொண்டாடுகிறீர்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
அதன் பிறகு, நலன் குமாரசாமியுடன் பணிபுரிய வேண்டும் என்று விரும்பினேன். அவரைப் போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து படங்கள் இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும்; எந்தக் கலைஞரும் இல்லாமல் அவர் இருக்கக் கூடாது. இன்றைக்குச் சிறந்த இயக்குநர்களாக இருப்பவர்கள்கூட நலன் வந்தால் எழுந்து நிற்கிறார்கள். அப்பொழுதுதான் மற்ற இயக்குநர்கள் அவர் மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டேன். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம், அவருக்கிருக்கும் சினிமா அறிவும் மிகச்சிறந்தது” என்றார்.
“சர்தார் 2-வில் எந்தக் குறையும் வைக்கவில்லை!”
தொடர்ந்து பேசிய அவர் ‘சர்தார் 2’ படம் குறித்துப் பேசுகையில், “ஆனால் இந்த முறை நான் ரசிகர்களை ஏமாற்றவில்லை; எந்தக் குறையும் வைக்காமல் ஃபுல்லாக இறங்கி அடித்துள்ளோம். நீங்கள் மிகவும் சந்தோஷமாகப் பார்த்து என்ஜாய் பண்ணும் படமாக இது இருக்கும். அக்கு வேரா ஆணி வேராக, இயக்குநர் மித்ரன் உட்கார்ந்து ரசித்து, ஆடியன்ஸ் எதை விரும்பிக் கொண்டாடுவார்களோ அதை பார்த்துப் பார்த்துச் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
