என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்.. விடாதீர்கள் – நிதி நிறுவனம் ஊழியர் தற்கொலை
தனியார் நிதி நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியால் முன்னாள் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம், விடாதீர்கள் என்று எழுதி வாட்ஸப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28) இவர் வந்தவாசியில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு விக்னேஷ் அந்த நிறுவனத்தில் இருந்து நின்று விட்டார்.
விக்னேஷ் நிதி நிறுவனத்தில் பணியாற்றியபோது நிறைய பேருக்கு கடன் வாங்கி தந்துள்ளார். அந்த நபர்களிடம் இருந்து கடனை முழுமையாக வசூல் செய்து தந்துவிட்டு, அதன் பின்னர் பணியில் இருந்து நின்று விடு என்று நிதி நிறுவன நிர்வாகிகளான மேலாளர் கோவிந்தசாமி உதவி சீனியர் மேலாளர்கள் கனகராஜ் மற்றும் குமரேசன் ஆகியோர் விக்னேஷை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். மேலும் நிதி நிறுவனத்தில் விக்னேஷ் வேலைக்கு சேரும்போது கொடுத்த ஒரிஜினல் சான்றிதழை திருப்பித் தர மறுத்துள்ளனர். கடனை வசூல் செய்து கொடுத்தால் மட்டுமே சான்றிதழை கொடுப்போம் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்த விக்னேஷ் ஏம்பலம் கிராமத்தில் உள்ள அடர்ந்த மாந்தோப்புக்கு சென்று தன்னுடைய செல்போன் வாட்ஸ் அப் மூலம் “எனது சாவிற்கு தனியார் நிதி நிறுவன நிர்வாக மேலாளர் கோவிந்தசாமி உதவி சீனியர் மேலாளர்கள் கனகராஜ் மற்றும் குமரேசன் ஆகிய மூன்று பேரும் தான் காரணம் என்று எழுதி வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு, போலீசாருக்கு அனுப்பிவிட்டு மாந்தோப்பில் தூக்கு போட்டுக் கொண்டு
தற்கொலை செய்து கொண்டார்”.
வாட்ஸ் அப்பில் வந்த பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விக்னேஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் உடனடியாக தெள்ளார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் விக்னேஷின் செல்போனில் சிக்னலை வைத்து மாந்தோப்பிற்கு சென்று பார்த்த போது விக்னேஷ் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அடுத்து விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விக்னேஷின் சாவிற்கு காரணமாக இருக்கும் தனியார் நிதி நிறுவன மேலாளர் கோவிந்தசாமி உதவி சீனியர் மேலாளர்கள் கனகராஜ் மற்றும் குமரேசன் ஆகியோர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்னேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து நின்ற பிறகு கடனை வசூலிக்கும்படி வற்புறுத்தியதால் முன்னாள் ஊழியர் என்னுடைய மரணத்திற்கு 3 பேர் காரணம் என எழுதி உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விக்னேஷ் வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிய செய்தியில்,ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் உள்ள அனைவரையும் விடாதீர்கள், நான் இல்லை என்று கவலைப்பட வேண்டாம் அதேபோல் தம்பி மற்றும் அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ளவும் என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.