விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சிஅ.இ.அ.தி.மு.க 8 வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன்(52), அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் அதிமுக உறுப்பினர் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் இணைந்து தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும் தன்னிடம் 1 கோடியே 38 லட்சம் மோசடி செய்த தாகவும், பணத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பன் மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் பட்டுராஜன், கந்தநிலா,ராணி நாச்சியார் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாலை 4 மணியளவில் விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஐயப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன் சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளராக மட்டுமின்றி செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர் மற்றும் சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.


