சென்னையில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெரம்பூர் கக்கன் ஜி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(48). இவர் அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்றைய தினம் அதே பகுதியில் உள்ள தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு இரவு 10.20 மணியளவில் அருகில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது வீட்டின் அருகே ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் இளங்கோவனை சரமாரியாக வெட்டியுள்ளது. இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இளங்கோவன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் பகுதி காவல் நிலைய போலீசார் உயிரிழந்த இளங்கோவனின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பகுதி செயலாளர் உயிரிழந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக மாவட்ட செயளாளர் ராஜேஷ் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.