Homeசெய்திகள்க்ரைம்கிரிப்டோ முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த...

கிரிப்டோ முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கைது!

-

- Advertisement -

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

தனியார் கிரிப்டோ நிறுவனத்தில் வேலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதனின் மகள் யுவஸ்ரீ (22). இவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விழுப்புரம்–செஞ்சி சாலையில் செயல்பட்டு வந்த தனியார் கிரிப்டோ டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அடையகருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (42) என்பவர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த மதுபாலா (36) என்பவர் மேலாளராகப் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வங்கி கணக்குகள் மூலம் பண மோசடி

மாரியப்பனும் மதுபாலாவும் தமக்கும், நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற பெண்களுக்கும் யூ.எஸ்.டி.டி. (USDT) வாங்குதல் மற்றும் விற்பனை தொடர்பான பணிகளை வழங்குவதாகக் கூறியதாக யுவஸ்ரீ புகாரில் தெரிவித்துள்ளார்.

யூ.எஸ்.டி.டி. என்பது அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின் ஆகும். இதன் மதிப்பு பொதுவாக ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக இருக்கும்.

இந்தப் பணிக்காக ஆதார் விவரங்களைப் பெற்று சம்பளக் கணக்குகள் தொடங்க வேண்டும் எனக் கூறியதாகவும், பின்னர் தமது பெயரிலும் மற்ற ஊழியர்களின் பெயரிலும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கிரிப்டோ முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறிப் பணம் பெற்றதாகவும், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தக் கணக்குகள் மூலம் மோசடி நடைபெற்றதாகவும் யுவஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார்.

ரூ.1 கோடி மோசடி: போலீசார் விசாரணை

இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஸ்ரீபிரியா தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாரியப்பன் மற்றும் மதுபாலா ஆகியோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த போலீசார், நேற்றிரவு அவர்களைக் கைது செய்தனர்.

கணினிகள், வங்கி ஆவணங்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 கணினிகள், ஒரு மடிக்கணினி, 3 கையடக்கக் கணினிகள், 4 செல்போன்கள், 40 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 20 ஏ.டி.எம். அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மின்விசிறிகள், சோபா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக மாரியப்பன் மற்றும் மதுபாலாவிடம் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.37 லட்சம் வங்கி மோசடி: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

MUST READ