Homeசெய்திகள்க்ரைம்ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.3.40 கோடி மோசடி – ஆந்திராவில் முக்கிய...

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.3.40 கோடி மோசடி – ஆந்திராவில் முக்கிய குற்றவாளி கைது!

-

- Advertisement -

ஆன்லைன் மூலம் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.3.40 கோடி பணத்தை அபகரித்து மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரி ஆந்திர மாநிலத்தில் கைது. மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கை.

we-r-hiring

சென்னையைச் சேர்ந்த சுமார் 69 வயது முன்னாள் வங்கி ஊழியரான புகார்தாரை, Whatsapp மூலமாக தொடர்புகொண்ட FYERSHNIVIP என்ற வாட்சப் குழுவை சேர்ந்த நபர் தன்னை Chief Investment Officer ராஜீவ் மேத்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பெங்களூருவில் இயங்கி வரும் தங்களது இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசைகாட்டி நம்ப வைத்தார்.

மேலும், FYERSHNIVIP என்ற whatsapp குழுவில் 50 நபர்கள் உறுப்பினர்களாக இருப்பது போன்றும், அவர்கள் முதலீடு செய்து அதிக அளவில் லாபம் ஈட்டியது போன்று பொய்யான மற்றும் போலியான உரையாடல்களை பரப்பியதை நம்பிய மேற்படி முன்னாள் வங்கி ஊழியர், மேற்படி நிறுவனத்தினர் கொடுத்த வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு, தனது வங்கிக் கணக்கில் இருந்து 13 தவணைகளாக மொத்தம் சுமார் 3.40 கோடி ரூபாயை அனுப்பியுள்ளார்.

மேற்படி நிறுவனத்தினர் உறுதியளித்தபடி எவ்வித லாபத் தொகையும் தராததுடன், மேற்படி நபர்களின் செல்போன் எண்கள் அனைத்தும் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்ததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், 2025ம் ஆண்டு சைபர் குற்ற அவசர எண் 1930 ல் புகாரை பதிவு செய்து, பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின்பேரில், சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் தலைமறைவாக உள்ள எதிரிகளை விரைந்து கைது செய்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் அறிவுரையின்பேரில், சைபர் கிரைம் காவல் அதிகாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு, விசாகப்பட்டிணத்தில் முகாமிட்டு கண்காணித்து, புகார்தாரரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 40 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளரான எதிரி கொனத்தலா கிருஷ்ணா, வ/52, மெருடி மாவட்டம், அனகாபள்ளி மண்டலம், விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் என்பவரை 06.10.2026 அன்று கைது செய்து விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

புலன் விசாரணையில், புகார்தரார் பணம் அனுப்பிய பண பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு, புகார்தாரர் பணம் அனுப்பிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. புகார்தாரர் 13 பரிவர்த்தனைகளாக அனுப்பிய தொகையானது பின்னர் 20 அடுக்குகளாக, 150 வங்கிகள் மற்றும் 27 Bank Payment App மூலமாக மொத்தம் 8,574 வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனைகளாக அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் சுமார் 21 லட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

சைபர் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை!

பெரும்பாலான சைபர் குற்றவாளிகள் இது போன்று பெரிய நெட்வொர்க் வைத்து கொண்டு, பல ஏஜெண்டுகள் உதவியோடு, வெளிநாட்டில் இருந்து பண பரிவர்த்தனைகளை இயக்கி, மக்களின் பணத்தை ஏமாற்றி மோசடி செய்வதும், இக்குற்றத்தை தங்களது பெயரில் செய்யாமல், Current Account Holders ஐ குறிவைத்து அவர்களுக்கு Loan, Commission தருகிறோம் என்று கூறி அவர்களின் வங்கி கணக்கை வாங்கி, சில சமயங்களில் சிம் கார்டு, செல்போன், Net banking Password என்று அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொண்டு, மிக சுலபமாக பணத்தை அடுத்தடுத்த அடுக்குகளுக்கு மாற்றி விடுவது தெரியவந்தது.

எனவே Current Account வைத்திருக்கும் தொழில் முனைவோர் யாரும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், சிம்கார்டு, செல்போன் போன்றவற்றை எந்த காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வது குற்றச் செயல் என்றும், மீறி செயல்பட்டால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்ய நேரிடும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இதுபோன்று முகம் தெரியாத நபர்கள், வாட்ஸ்அப்குழு, இணையதளம், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மூலமாக தொடர்பு கொண்டு, அதிகலாபம் அளிப்பதாக கூறி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு, ஆசை வார்த்தைகளை காட்டியும், துவக்கத்தில் சிறிய அளவு லாபத்தை கொடுத்து ஏமாற்றும் நபர்களை நம்பி, போலியான நிறுவனங்களில் முதலீடு செய்து சேமிப்புகளை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகாமல் கவனத்துடன் இருக்குமாறு சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி உள்ளிட்ட சைபர் மோசடிகளுக்கு உள்ளானால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து கைதி தப்பிய சம்பவம் – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!

MUST READ