கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் விவசாயத் தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்ற 60 வயது மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புல் அறுக்கச் சென்ற மூதாட்டி

லாலாப்பேட்டை அருகே மேல வீட்டுக்கட்டி பகுதியைச் சேர்ந்த இளஞ்சியம் (60) என்பவர் நேற்று மாலை ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியதாக கூறப்படுகிறது.
வாழைத்தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் சடலம்
இந்த நிலையில், கணபதி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இளஞ்சியம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
நகைகள் பறிக்கப்பட்டதாக தகவல்
மூதாட்டியை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் காதில் இருந்த தோடுகளை எடுத்துச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நகைக்காக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூத்த அதிகாரிகள் நேரில் விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டிஐஜி லோகநாதன் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளியை தேடும் பணி தீவிரம்
விவசாயத் தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியை குறிவைத்து இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா, நகைகளை பறிப்பதற்காக கொலை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை நடந்த இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் மீன் சந்தையில் வாடிக்கையாளரின் செல்போனை திருடிய இளைஞர்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
