Homeசெய்திகள்க்ரைம்போலி ஆவணங்கள் மூலம் ரூ.37 லட்சம் வங்கி மோசடி: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

போலி ஆவணங்கள் மூலம் ரூ.37 லட்சம் வங்கி மோசடி: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

-

- Advertisement -

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் புகார்தாரருக்குச் சொந்தமான வீட்டு மனையை அடமானம் வைத்து ரூ.37 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், சுமார் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

ரூ.37 லட்சம் கடன் பெற்று மோசடி

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி கார்டன், காமராஜ் அவென்யூ பகுதியில் உள்ள புகார்தாரர் பிலோமினா ராணி மற்றும் அவரது கணவர் பொன்னுசாமி ஆகியோருக்குச் சொந்தமான 6,772 சதுர அடி இடத்தை, லீமாராஜ் என்பவர் போலியான வாரிசுச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், மற்றொரு நபரான ஹரிநாராயணனுடன் இணைந்து, அந்த இடத்தை புதுதில்லியில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.37 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

2007-ல் வழக்குப்பதிவு

இதுதொடர்பாக, கடந்த 2007-ஆம் ஆண்டு பிலோமினா ராணி சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், எதிரிகள் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இரண்டாவது எதிரியான ஹரிநாராயணன் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்ததால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் டாக்டர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி, CCIW பிரிவு காவல் உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஹரிநாராயணன் (60), பார்த்தசாரதியின் மகன் என்பவரை 09.10.2026 அன்று கைது செய்தனர்.

நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட ஹரிநாராயணனிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எதிரியைக் கண்டுபிடித்து கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை, காவல் ஆணையாளர் வெகுவாகப் பாராட்டினார்.

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.3.40 கோடி மோசடி – ஆந்திராவில் முக்கிய குற்றவாளி கைது!

MUST READ