கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் 9 பிரிவுகளில் 4 பேரை போலீசார் கைது செய்யது சிறையில் அடைத்தனர்.
கவுன்சிலரின் கணவருடன் ஏற்பட்ட நிலத் தகராறில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கடத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட இளைஞரே தம்மை தாக்கி கடத்த முயற்சிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசில் சிக்கிய சுவாரசிய பின்னணி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ்குமார். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவரது மனைவி ரோஜா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 24ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு, பெண் கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரின் மகன் ஜேக்கப் இருவரையும் மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவர்களது காரிலேயே கடத்திச் சென்றதாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாண் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆந்திர மாநில எல்லை என்பதால் ஆந்திர போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரு மாநில போலீசாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே தங்களை கடத்திய மர்ம கும்பல் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே ராள்ளகுப்பம் என்ற பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறி அன்று இரவே பெண் கவுன்சிலர் ரோஜா அவரது மகன் இருவரும் அவர்களது காரிலேயே பத்திரமாக வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக பாதிரிவேடு காவல் துறையினர் ஐபிசி 363 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வீடு திரும்பிய பெண் கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகிய இருவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 5 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் துப்பாக்கி முனையில் தங்களை கடத்தி சென்றதாகவும், ஆந்திராவில் வைத்து சுற்றி திரிந்ததாகவும், கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, பிரேஸ்லெட் என சுமார் 15 சவரன் நகையை பறித்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் இரவு தங்களை காருடன் தப்பி செல்லுங்கள் என விட்டுவிட்டு கடத்தல் கும்பல் சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். காரில் கடத்தப்பட்டு ஆந்திராவிற்கு அழைத்து செல்லப்பட்ட கவுன்சிலரின் செல்போன் சிக்னல் அவரது மகனின் செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதே நேரத்தில் அவர்களுடன் பயணித்த செல்போன் சிக்னல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (26) என்ற இளைஞர் ஒருவர் கும்மிடிப்பூண்டி சரகத்திற்குட்பட்ட சிப்காட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்க சென்றுள்ளார்.
அதிமுக கவுன்சிலர் கடத்தலில் தம்மை தொடர்புபடுத்தி கவுன்சிலரின் கணவரின் ஆட்கள் தன்னை தாக்கி கடத்த முயற்சிப்பதாக புகார் அளிக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் உங்களது எல்லையில் உள்ள பாதிரிவேடு காவல் நிலையத்திலேயே சென்று புகார் அளியுங்கள் என அங்கிருந்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு சென்ற சுரேந்தர் கடத்தல் சம்பவத்தில் திட்டமிட்டு தன் மீது பழி சுமத்தி தன்னையும் கடத்த அதிமுக நிர்வாகி ரமேஷ்குமாரின் ஆட்கள் முயற்சிப்பதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலரின் குடும்பத்தினர் மீதே புகார் அளிக்க வந்த இளைஞர் மீது சந்தேகமடைந்து அவரிடம் பாதிரிவேடு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 26 வயதான சுரேந்தர் டிப்ளமோ படிப்பு முடித்து ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி கொண்டு விவசாயம் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
சுரேந்தருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தை கவுன்சிலர் கணவரும் அதிமுக பிரமுகருமான ரமேஷ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், அந்த நிலத்தின் சந்தை மதிப்பிற்குரிய பணத்தை வழங்கவில்லை என கூறியுள்ளார்.
அதே போல் மீதமுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்குமாறு கவுன்சிலரின் கணவர் தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்ய மின் இணைப்பு பெறுவதற்காக சென்றபோது அதிகார பலத்தை பயன்படுத்தி மின் இணைப்பு கிடைக்க விடாமல் தடுத்து வந்ததாகவும், விவசாயம் செய்ய முடியாததால் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்த போது நிலத்தை வாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் இதனால் வேறு வழி இன்றி அதிமுக பிரமுகர் ரமேஷ்குமாரை மிரட்டுவதற்காக திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பீகார் மாநிலம் சென்று கள்ள கை துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்துள்ளார். தனது நண்பர்களான கும்ப்ளியை சேர்ந்த சந்தோஷ் 27, ஆந்திராவை சேர்ந்த பாஸ்கர் 34, நவீன் 24, சந்திரசேகர் ஆகியோருக்கு தலா 3 லட்சம் பணம் தருவதாக கூறி அவர்களை கூட்டு சேர்த்து திட்டமிட்டுள்ளார்.
ரமேஷ்குமாரை மிரட்டுவதற்காக கூட்டாளிகளுடன் கவுன்சிலர் வீட்டில் புகுந்துள்ளனர். ஆனால் வீட்டில் ரமேஷ்குமார் இல்லாததால் அவரது மனைவி, மகன் மற்றும் வீட்டில் இருந்த காரை கடத்திச் சென்றதாக சுரேந்தர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தங்களிடம் இருந்து பெற்று கொண்ட 3 ஏக்கர் நிலத்தை தனக்கு திருப்பி கொடுக்க வேண்டும் எனவும், 20 லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் பெண் கவுன்சிலரிடம் சுரேந்தர் டீல் பேசியுள்ளார்.
வீட்டிற்கு திரும்பி சென்றதும் தமது கணவரிடம் பேசி நிலம் மற்றும் பணத்தை பெற்று தருவதாக பெண் கவுசின்லர் ரோஜா சுரேந்தரிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் கடத்தல் சம்பவம் தொடர்பாக தன்னை யாரிடமும் காட்டி கொடுக்க கூடாது எனவும் அப்படி காட்டி கொடுத்தால் சிறைக்கு சென்று திரும்பி வந்ததும் உங்களை தீர்த்துவிடுவேன் என மிரட்டி பைபிள் மீது கவுன்சிலர் ரோஜாவிடம் சுரேந்தர் சத்தியம் வாங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து கடத்தப்பட்ட பெண் கவுன்சிலரை ஆந்திர மாநிலம் வரதையப்பாளையம் அருகே காரில் விட்டுவிட்டு அன்று மாலையே இருசக்கர வாகனத்தில் கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
கவுன்சிலரின் வீட்டின் முன் ஏராளமான கிராமத்தினர் திரள்வதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆந்திர போலீசார் என அடுத்தடுத்து குவிந்ததால் அச்சமடைந்த சுரேந்தர் கடத்திச் சென்றவர்களை விட்டு விடுமாறு தமது நண்பர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து கடத்தப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் கடத்தலுக்கு அடுத்த நாள் கவுன்சிலரின் கணவர் ரமேஷ்குமாரின் ஆட்கள் தம்மை தேடுவதாக கிடைத்த தகவலின் பேரில் முதலில் போலீசில் அவர் மீது புகார் அளித்து தப்பித்து கொள்ளலாம் என எண்ணி காவல் நிலையத்தை அணுகியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுரேந்தரிடம் இருந்த கை துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார் அவனது கூட்டாளிகள் மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில் கடத்தல் பிரிவு மட்டுமின்றி கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன் ஆகிய 4 பேரையும் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கடத்தல் வழக்கில் தலைமறைவாகி உள்ள சந்திரசேகர் என்பவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட இளைஞரே தம்மை கடத்த முயற்சிப்பதாக போலீசில் புகார் அளித்து வழக்கில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.