5 சவரன் நகைக்காக கொலை செய்த நபருக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை. வங்கி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக பெண் கொல்லப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் அடுத்த கல்யாணபுரத்தில் பாஸ்கரன், கிருத்திகா தேவி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கரன் அரிமளம் ஊராட்சி ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதி வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தனியார் வங்கி அதிகாரி ஹசன் முகம்மது வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டில் தனியாக இருந்த கிருத்திகாதேவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
கிருத்திகா தேவியை கொன்றுவிட்டு மர்மநபர் ஓடிவிட்டதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற ஹசன் முகம்மதுவையும் மர்மநபர் தாக்கியதாக கூறப்பட்டது.
பின்னர் சம்பவம் இடத்திற்கு விரைந்த திருகோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடத்திய தீவிர விசாரணையில் கிருத்திகாதேவியை கொலை செய்ததே ஹசன் முகம்மது என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர். மேலும் 5 சவரன் நகைக்காகத்தான் அவர் கொலைசெய்ததையும் காவல்துறை உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில் ஹசன் முகம்மது குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் நகைக்காக பெண்ணை கொலை செய்த ஹசன் முகம்மதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.