சென்னை கொரட்டூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கட்டியில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஊழியர்களுக்கு சம்பள பணத்தை வழங்க வங்கியில் இருந்து எடுத்து வந்ததை நோட்டமிட்டு திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். சென்னை நொளம்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் விமல் ராஜ் /29 இவர் டான் ஃபெசிலிட்டி என்கின்ற நிறுவனத்தில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் முகப்பேரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தனது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு ஊதிய பணம் கொடுப்பதற்காக இரண்டு 2லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் சீட் அடியில் வைத்துக்கொண்டு, கொரட்டூர் கேனல் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது இவரை நோட்டுமீட்டு பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் இவர் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற கன நேரத்தில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் துணிகரமாக சீட் அடியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மீண்டும் விமல் ராஜ் தனது நிறுவனத்திற்கு சென்று சீட்டை திறந்து பார்க்கும் போது பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விமல் ராஜ் உடனடியாக அவர் வாகனத்தை நிறுத்திய அடுக்கு மாடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது மர்ம நபர்கள் பணத்தை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விமல்ராஜ் அளித்த புகாரின் படி கொரட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அருகே பட்டப்பகலில் வாகனத்தை நிறுத்தி சென்ற பத்தே நிமிடத்தில் நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் இருவர் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


