திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ‘ஏபிஆர்’ என்ற நிறுவனத்தின் பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குற்றவாளிக்கு உடந்தையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியும் 200-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:


தங்க மாளிகை திட்டமும்… போலி வாக்குறுதியும்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளைத் தலைமையிடமாகக் கொண்டு, அல்தாப் என்பவர் ‘ஏபிஆர்’ (APR) என்ற நிறுவனத்தின் மூலமாகத் தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு மற்றும் திருமணச் சீர்வரிசை போன்ற பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களைத் ‘தங்க மாளிகை சிறு சேமிப்புத் திட்டம்’ என்ற பெயரில் நடத்தி வந்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 100 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை பொதுமக்கள் சிறு சேமிப்பாகக் கட்ட வேண்டும் என்றும், அதற்குப் பண்டிகைக் காலங்களுக்கு முன்பாகப் பட்டாசு, அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன.
இதனை நம்பி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிச் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சிறைக்குச் சென்று வந்தும் ஓயாத மோசடி:
பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தபடி எந்தவிதப் பொருட்களையும் வழங்காமலும், கட்டிய பணத்தைத் திருப்பித் தராமலும் அல்தாப் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்துப் பலமுறை மாவட்ட எஸ்பி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்குப் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், கடந்த காலங்களில் அல்தாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த அல்தாப், தற்பொழுது தனது மனைவியின் மூலமாக மறைமுகமாக வெவ்வேறு பெயர்களில் புதிய ஏஜெண்டுகளை நியமித்து மீண்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். “முதலில் கட்டி ஏமாந்தவர்களுக்கும் மீண்டும் பணம் கட்டினால் பழைய பணத்தைச் சேர்த்துத் தருகிறேன்” என்று மீண்டும் ஆசை வார்த்தை கூறி, பல ஆயிரம் கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டு தற்பொழுது தலைமறைவாகி அலைக்கழித்து வருகிறார்.
டிஎஸ்பி மீது ஏஜெண்டுகள் பரபரப்பு குற்றச்சாட்டு:
இதனால் ஏமாற்றமடைந்த 200-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் இன்று திரண்டு வந்து திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறியதாவது: “வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள் பண்டிகையைக் கொண்டாடலாம் என்ற ஆசையில் எங்களிடம் சிறுகச் சிறுகக் கட்டிய பணத்தை நம்பி அல்தாபிடம் கொடுத்தோம். கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் வரை மூன்று மாவட்டங்களில் இருந்து வசூலித்துக் கொடுத்துள்ளோம். தற்பொழுது பணம் கட்டிய பொதுமக்கள் எங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களைக் கொடுங்கள், இல்லை என்றால் பணத்தைக் கொடுங்கள் எனத் தகராறு செய்து, எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். எங்களின் வாழ்வாதாரமே போச்சு.
நாங்கள் அல்தாப் தங்கியிருக்கும் இடத்தின் லொகேஷனை (Live Location) துல்லியமாகக் கண்டுபிடித்துக் கொடுத்தும், மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சுதாகர் குற்றவாளிக்கு உடந்தையாகச் செயல்பட்டு அவரைப் பிடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மாவட்ட எஸ்பி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மோசடி மன்னன் அல்தாஃபைக் கைது செய்து எங்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என வேதனையுடன் கோரிக்கை விடுத்தனர்.
