“கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டு, இப்போது திடீரென வரும் ஆங்கில ஆசிரியை எங்களுக்கு வேண்டாம்; எங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த நிரந்தர ஆசிரியை வேண்டும்” என வலியுறுத்திக் கோவில்பட்டி அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 148 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கவிதா என்பவர் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். ஆனால், இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வேறு பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் (Deputation) அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக இப்பள்ளியில் முறையான ஆங்கில ஆசிரியை இல்லாமல் மாணவர்கள் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியை கவிதா மீண்டும் கரடிகுளம் பள்ளிக்கு வந்தபோது, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் சென்று, பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை கவிதா இப்பள்ளியில் பணியாற்றக் கூடாது என்றும், வேறு நிரந்தர ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த கயத்தார் வட்டார கல்வி அலுவலர் செல்வ லட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். “ஆசிரியை கவிதாவை வெளியேற்றி, நிரந்தர ஆசிரியை நியமிக்கும் வரை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்” எனப் பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிகாரிகள் ஆசிரியை கவிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, “இப்பிரச்சனைக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை தற்காலிகமாகப் பள்ளியை விட்டு வெளியே செல்லுங்கள்” என அறிவுறுத்தினர். அதன்பேரில் ஆசிரியை கவிதா பள்ளியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆசிரியை கவிதா கூறுகையில், “என்ன காரணம் என்றே சொல்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக 3 மாதங்களுக்கு ஒருமுறை என்னை மாற்றுப் பணிக்கு அனுப்பி வருகின்றனர். தற்போதும் மாவட்டக் கல்வி அலுவலர் மாற்றுப் பணிக்கு உத்தரவு வழங்கியும், தலைமை ஆசிரியை விஜயராணி என்னை விடுவிக்கக் கடிதம் தர மறுக்கிறார். என் குடும்பத்தாரைப் பற்றியும் அவதூறாகப் பேசுகிறார். இப்பிரச்சனை தொடர்பாக நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களைத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார். இதற்கிடையே, ஆசிரியை கவிதா மற்றும் தலைமை ஆசிரியை விஜயராணி ஆகியோருக்கு இடையே நடந்த காரசாரமான பேச்சுவார்த்தை அடங்கிய ஆடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது.
அதில் தலைமை ஆசிரியை, “நீங்கள் மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டால் இங்கு ஆங்கில ஆசிரியை பணியிடம் காலியாக இருப்பது அதிகாரிகளுக்குத் தெரியாது; வேறு யாரையும் நியமிக்கவும் முடியாது. இதனால் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மாற்றுப் பணிக்கு விடுவிக்க முடியாது, பொது இடமாறுதல் (Counseling) மூலமாக வேறு இடத்திற்கு மாறிக் கொள்ளுங்கள்” எனக் கூறுவதும், ஆசிரியை கவிதாவின் விடுமுறை எடுக்கும் முறை மற்றும் அவரது தனிப்பட்ட குடும்பப் பின்னணி குறித்துச் சில கடுமையான, அநாகரிகமான வார்த்தைகளைப் பேசி வாதாடுவதும் பதிவாகியுள்ளது. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைக்கு இடையேயான இந்த ஆடியோ மோதல் மற்றும் பெற்றோர்களின் போராட்டம் கோவில்பட்டி கல்வி வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
