கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது ஆண் குழந்தையைக் கடத்திச் சென்ற நபரை, போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஏழு மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் கைது செய்து குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடையின் அருகே விளையாடிய சிறுவன் மாயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் – பரமேஸ் தம்பதியினருக்கு புகழ், ரேதுசன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயபிரகாஷ், குரால் நான்கு முனை சந்திப்பு பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். கடையின் அருகே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 13) ஜெயபிரகாஷ் வேலை நிமித்தமாக சேலம் சென்றுவிட்டு திரும்பியபோது, கடையின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அவரது இளைய மகன் ரேதுசனைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் சிறுவனைத் தேடியுள்ளனர். ஆனால், சிறுவன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, மூன்று வயது குழந்தை காணாமல் போன தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்த முக்கியத் தகவல்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் காவல் நிலைய போலீசார் உடனடியாக அங்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஈச்சர் வாகனத்தில் வந்திறங்கிய நபர் ஒருவர் சிறுவனைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்த ஈச்சர் வாகன ஓட்டுநரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, வேப்பூரில் இருந்து லிப்ட் கேட்டு வந்த ஒருவர், குரால் நான்கு முனை சந்திப்பில் தேநீர் குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியபோது, தனது வீட்டுக்குத் தொலைபேசியில் பேசிவிட்டு தருவதாகக் கூறி ஓட்டுநரின் செல்போனை வாங்கியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
செல்போன் சிக்னலை வைத்து சேலத்தில் தீவிர தேடுதல்
ஓட்டுநரின் செல்போனை எடுத்துச் சென்ற நபரைப் பிடிக்க போலீசார் துரிதமாகச் செயல்பட்டனர். செல்போன் எண்ணின் சிக்னலை அடிப்படையாகக் கொண்டு அந்த நபர் சென்ற வழித்தடத்தைக் கண்டறிந்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
சேலம் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்ற போலீசார், அங்கு நின்றிருந்த பேருந்துகளில் ஏறி இறங்கி சிறுவனைத் தேடினர். அப்போது, ஓசூர் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் குழந்தையுடன் அமர்ந்திருந்த சந்தேக நபரைப் போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக அவரைப் பிடித்து, அவரிடமிருந்த மூன்று வயது சிறுவன் ரேதுசனைப் பத்திரமாக மீட்டனர்.
குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
மீட்கப்பட்ட சிறுவனை போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் நிம்மதியடைந்தனர். கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கீழ்குப்பம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தையைக் கடத்தியதன் நோக்கம் என்ன?
போலீசாரின் விசாரணையில், பிடிபட்ட நபர் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அவர் எதற்காகக் குழந்தையை அழைத்துச் சென்றார், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, குழந்தையை விற்பனை செய்யும் நோக்கத்துடன் கடத்தினாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரால் நான்கு முனை சந்திப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் காணாமல் போன நிலையில், செல்போன் சிக்னலைப் பயன்படுத்தி சேலம் புதிய பேருந்து நிலையம் வரை சென்று, ஓசூர் செல்லும் பேருந்தில் இருந்த குழந்தையை ஏழு மணி நேரத்துக்குள் மீட்ட போலீசாரின் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
