மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வைக் காண வந்த அரியலூர் மாவட்ட பாஜக நிர்வாகி, கிரிவலம் சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பழனியப்பன் (50) என்பது தெரியவந்துள்ளது.
அரியலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி
அரியலூர் மாவட்டம், திருமானூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் பழனியப்பன் (50). விவசாயத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், பாஜகவில் மண்டலப் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (45). திவ்யா, தீபிகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
கிரிவலம் சென்றபோது திடீர் மயக்கம்
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தீபத் தூண் தீபம் ஏற்றும் நிகழ்வைக் காண்பதற்காகப் பாஜக நிர்வாகிகளுடன் பழனியப்பன் வந்ததாகக் கூறப்படுகிறது. தீபம் ஏற்றிய நிகழ்வுக்குப் பிறகு கிரிவலம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் சோகம்
பழனியப்பனின் மூத்த மகள் திவ்யாவுக்குப் பிப்ரவரி 10-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவைக் காண வந்த பாஜக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
