Homeசெய்திகள்மாவட்டம்எதிர்பார்த்த அளவு பெய்யாத பருவமழை – சிக்கன நீர் மேலாண்மையைப் பின்பற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்!

எதிர்பார்த்த அளவு பெய்யாத பருவமழை – சிக்கன நீர் மேலாண்மையைப் பின்பற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

காரையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு – ஏரி, குளங்களுக்கு நீர் வழங்க முடியாது என ஆட்சியர் தகவல்; கவலையில் விவசாயிகள்!எதிர்பார்த்த அளவு பெய்யாத பருவமழை – சிக்கன நீர் மேலாண்மையைப் பின்பற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்!

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு அணையில் இருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார். இன்று முதல் 125 நாட்களுக்கு, அதாவது 2027 மார்ச் 31ஆம் தேதி வரை, அணையின் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் திறப்பின் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 40,830 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளன. இருப்பினும், தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடி பாசன வசதி பெறும் கால்வாய்களுக்கு மட்டுமே தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரி, குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், அதற்கான உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியான் கால்வாய், கோடகன் கால்வாய் மற்றும் பாளையம் கால்வாய் ஆகிய கால்வாய்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தற்போதைய அணை நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழையளவைக் கருத்தில் கொண்டே தண்ணீர் திறப்பு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

மேலும், பருவமழை எதிர்பார்த்த அளவைவிடக் குறைவாகப் பெய்துள்ளதால், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தற்போது அணையில் 78 அடி தண்ணீர் இருப்பதாகவும், 60 அடி நீர்மட்டம் வரை மட்டுமே பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

குடிநீர் தேவைக்காக 45 முதல் 50 நாட்களுக்குத் தேவையான தண்ணீரை இருப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறினார்.

எனவே, விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி, நேரடி நெல் விதைப்பு மற்றும் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையிலான சிக்கன நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

மேலும், நெற்பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்றும், எதிர்பாராத விதமாகத் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால் உரிய இழப்பீடு பெற பயிர்க் காப்பீடு உதவும் என்றும் தெரிவித்தார்.

இறைவனும் இயற்கையும் கைகொடுக்கும் என நம்புவதாகவும், 125 நாட்களும் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள போதிலும், கால்வாய்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என்றும் ஏரி, குளங்களுக்கு தற்போது தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அறுவடை முடியும் வரை தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் என்பதற்கு உறுதியான உத்தரவாதம் இல்லாததால், பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மத்தியில் கவலையும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்:  கருகும் சம்பா பயிர்கள்: மழை வேண்டி ‘ஐயோ கொடும்பாவி’ செய்து வித்தியாசமான வழிபாடு!

MUST READ