கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.![]()
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்கத்தைச் சேர்ந்த மண்ணை பாலு தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகவும், எவ்வித நிபந்தனையும் இன்றியும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது போராட்டத்தில் பங்கேற்றவர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.
மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்ற நிபந்தனையை ரத்து செய்து, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
2025 ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில் விவசாயிகள் நூதனப் போராட்டம் – கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை!
