கூட்டுறவு விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், நாகப்பட்டினம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாலை அணிவிக்கப்பட்ட விவசாயி ஒருவரைப் பிணம் போலப் படுக்க வைத்து, அவரைச் சுற்றி சக விவசாயிகள் கும்மியடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துரைக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் பெற்ற கூட்டுறவு விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும், விவசாயப் பணிகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தற்போது நடைபெற்று வரும் சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்குப் புதிய கூட்டுறவுக் கடன்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
