Homeசெய்திகள்மாவட்டம்செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை –...

செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை – காவல்துறையினருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

-

- Advertisement -

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற ஓட்டுநர் பாலகிருஷ்ணன், கடந்த நவம்பர் 11ஆம் தேதி காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடற்கூராய்வு அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

உடற்கூராய்வில் 20 காயங்கள் – நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரானவர்கள், இந்த வழக்கில் தொடர்புடைய சில காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதைத் தவிர, அவர்கள் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடற்கூராய்வு அறிக்கையைப் பார்வையிட்ட நீதிபதிகள், அதில் பாலகிருஷ்ணனின் உடலில் 20 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

அவ்வாறு காயங்கள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விசாரணை அலுவலருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையைப் பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்ம மரணம்! – கழுத்து, முதுகில் காயங்கள்; மூளை வீக்கம், நுரையீரலில் ரத்தக்கசிவு – உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

MUST READ