Homeசெய்திகள்மாவட்டம்அரியலூர் தத்தனூர் அரசு பள்ளியில் சாதிப் பாகுபாடு புகார்: 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் –...

அரியலூர் தத்தனூர் அரசு பள்ளியில் சாதிப் பாகுபாடு புகார்: 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் – 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்

-

- Advertisement -

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதி ரீதியிலான பாகுபாடு நிலவுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, பள்ளியில் தொடர்ந்து பிரச்சினைகள் நிலவுவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் சாதிப் பாகுபாடு புகார்

தத்தனூர் கீழவெளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 256 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 19 ஆசிரியர்கள் மற்றும் இரண்டு அலுவலகப் பணியாளர்கள் என மொத்தம் 21 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான பாகுபாடு நிலவுவதாகவும், பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோர் தொடர்பாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஆசிரியர்கள் மாணவர்களிடையே சாதி ரீதியான பிரிவினையைத் தூண்டுவதாகவும், இதனால் ஆசிரியர்களுக்கு இடையேயும் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித்துறையிடம் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

விசாரணையில் அறை ஒதுக்கீட்டிலும் பாகுபாடு

பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பள்ளியில் சாதி ரீதியிலான பாகுபாடு நிலவியதாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு தரப்பைச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் மட்டும் தனி அறையைப் பயன்படுத்தி வந்ததாகவும், மற்ற ஆசிரியர்கள் வேறு அறையைப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்று ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் அளித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியர் முருகன், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் ஆகிய மூவரையும் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு

மூன்று பேரின் பணியிட மாற்ற உத்தரவைத் தொடர்ந்து, பள்ளி முன்பு இன்று மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வழக்கமாகப் படிக்கும் 256 மாணவர்களில் சுமார் 50 பேர் மட்டுமே இன்று பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். மேலும், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பள்ளி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்டக் கல்வி அலுவலர் மரகதவல்லி, பள்ளி ஆய்வாளர் செல்வகுமார், வருவாய் வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் நிலவும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், பிரச்சினையைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்படும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், பள்ளிக்கு இரவு நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பள்ளியில் அமைதியான சூழலை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

அரியலூர்: செந்துறை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் பேருந்து சிறைபிடிப்பு!

MUST READ