Homeசெய்திகள்மாவட்டம்பாலகிருஷ்ணன் மரணத்திற்கு கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! அனுமதி மறுப்பால்...

பாலகிருஷ்ணன் மரணத்திற்கு கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! அனுமதி மறுப்பால் போலீசாருடன் வாக்குவாதம் – செக்கானூரணியில் பரபரப்பு

-

- Advertisement -

மதுரை மாவட்டம் செக்கானூரணியில், காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் செக்கானூரணி பேருந்து நிலையப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன். கடந்த 3-ஆம் தேதி ஏலக்காய் பாரம் ஏற்றி வந்தபோது, வாலாந்தூர் அருகே கண்மாய் கரையில் அவரது லாரி தீப்பிடித்து எரிந்ததாக வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலகிருஷ்ணன், கடந்த 14-ஆம் தேதி அதிகாலை காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

உறவினர்கள் போராட்டம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

பாலகிருஷ்ணனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதைப் பெற்றுக்கொள்ள மறுத்த அவரது உறவினர்கள், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர் பழனிவேல் ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நான்கு நாட்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள், அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு – போலீசார் குவிப்பு

இந்நிலையில், பாலகிருஷ்ணன் மரணத்திற்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று செக்கானூரணி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஏடிஎஸ்பி சந்திரகுமார் மற்றும் டிஎஸ்பி சதீஸ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

மேலும், போராட்டக்காரர்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காகப் பேருந்து நிலையம் முன்பு காவல்துறை வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

போலீசாருடன் கடும் வாக்குவாதம்

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செக்கானூரணி பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.

லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் இந்தப் போராட்ட முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: பாலகிருஷ்ணன் குடும்பத்தினரைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல் – தவெக அரசு மீது கடும் குற்றச்சாட்டு!

MUST READ