ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே டெங்கு காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற வேலம்பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.
மொடக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாளையத்தைச் சேர்ந்த 39 வயதான காந்திமதி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் அருணா தலைமையிலான மருத்துவக் குழுவினர் வேலம்பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொது இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் திறந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் லார்வாக்கள் உள்ளனவா என்றும் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, தண்ணீரைத் தேங்கவிடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கிராமத்தில் வேறு யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளனவா என்றும் மருத்துவக் குழுவினர் கேட்டறிந்தனர்.
டெங்கு காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் மொடக்குறிச்சி மற்றும் வேலம்பாளையம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
