திருப்பூர் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 16 வயது மகள், தனது தந்தை ரயில் மோதி உயிரிழந்த அதே இடத்தில் நேற்று ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் – ஜானகி தம்பதியினரின் ஒரே மகள் சாதனா (16). தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ஜானகி, தனது மகள் சாதனா படித்து வந்த அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். சாதனா அப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தந்தை உயிரிழந்த சோகம்
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய கார்த்திக், வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்த சாதனா, அவரது திடீர் மறைவால் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதே இடத்தில் மாணவி உயிரிழப்பு
இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சாதனா, தனது தந்தை உயிரிழந்த அதே ரயில் தண்டவாளப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரை இழந்து ஏற்கனவே துயரத்தில் இருந்த ஆசிரியை ஜானகி, தற்போது தனது ஒரே மகளையும் இழந்துள்ள சம்பவம் செம்மாண்டம்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
