Homeசெய்திகள்மாவட்டம்சாலை விபத்தில் துண்டிக்கப்பட்ட 4 விரல்கள் – 17 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு...

சாலை விபத்தில் துண்டிக்கப்பட்ட 4 விரல்கள் – 17 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பொருத்தி மதுரை வேலம்மாள் மருத்துவமனை சாதனை!

-

- Advertisement -

சாலை விபத்தில் இடது கையின் கட்டைவிரல் உள்ளிட்ட நான்கு விரல்களை இழந்த 22 வயது இளைஞருக்கு, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 மணி நேரத் தொடர் அறுவை சிகிச்சை மூலம் விரல்கள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன.சாலை விபத்தில் துண்டிக்கப்பட்ட 4 விரல்கள் – 17 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பொருத்தி மதுரை வேலம்மாள் மருத்துவமனை சாதனை!

நவீன மைக்ரோஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மூலம் தென் தமிழகத்தில் புதிய மருத்துவச் சாதனை படைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த ஜெயசீலன் (22), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 20ஆம் தேதி விருதுநகரில் தனது வீட்டிலிருந்து நண்பரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் அவரது இடது கையின் கட்டைவிரல், நடுவிரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் என நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன.

இதையடுத்து, உறவினர்கள் துண்டிக்கப்பட்ட விரல்களைச் சேகரித்து, ஜெயசீலனை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவசர சிகிச்சை அளித்து, நவீன மைக்ரோஸ்கோப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் துண்டிக்கப்பட்ட விரல்களில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்களைத் துல்லியமாகக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சுமார் 17 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நான்கு விரல்களையும் மீண்டும் பொருத்தினர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஜெயசீலன் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 25 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது விரல்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலம்மாள் மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுசித்ரா கூறுகையில், விபத்தில் நான்கு விரல்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஜெயசீலன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

இரண்டு மணி நேரத்திற்குள் அவர் அனுமதிக்கப்பட்டதால், உடனடியாகப் பரிசோதனைகள் மேற்கொண்டு மைக்ரோஸ்கோப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது.

துண்டிக்கப்பட்ட விரல்களின் நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்கள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை மீண்டும் இணைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றார்.

மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திக் கூறுகையில், விபத்து ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் ஜெயசீலன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.

துண்டிக்கப்பட்ட விரல்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, ஐஸ்கட்டி மூலம் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால் விரல்களை மீண்டும் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவியாக இருந்தது.

துண்டிக்கப்பட்ட உறுப்புகளை விரைவாகவும் முறையாகவும் மருத்துவமனைக்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு விரல்களுக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

தேவையான மருந்துகள், நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் வழங்கப்பட்டு அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். மதுரையில் ஒரே நோயாளிக்கு நான்கு விரல்களையும் இணைப்பதற்காக 17 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை குறிப்பிடத்தக்கது என்றார்.

தென் தமிழகத்தில் நான்கு விரல்களையும் ஒரே நேரத்தில் 17 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தியுள்ளதாக வேலம்மாள் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சாலையை ஆக்கிரமித்ததாகப் புகார்: அயப்பாக்கம் சுந்தர விநாயகர் ஆலயத்தை இடிக்கும் அதிகாரிகள்!

MUST READ