புதுக்கோட்டை மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, மாநகராட்சி அலுவலகம் முன்பு நான்கு மாமன்ற உறுப்பினர்கள் பாய் விரித்து, தலையணை வைத்து படுத்துறங்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாநகராட்சியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளும், 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், பணிகளின்போது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள காவிரி குடிநீர் குழாய்களும் சேதப்படுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு குடிநீர் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதுமட்டுமின்றி, குழாய் பதிக்கும் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் முறையாகச் சீரமைக்கப்படாததால் பல இடங்களில் பள்ளம், படுகுழிகளாகவும், சேறும் சகதியுமாகவும் மாறியுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாகப் பலமுறை மாநகராட்சி மாமன்றக் கூட்டங்களில் முறையிட்டும், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, திமுகவைச் சேர்ந்த மூன்று மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு மாமன்ற உறுப்பினர் என நான்கு வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாய் விரித்து, தலையணை வைத்து படுத்துறங்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது, அதிகாரிகளுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சேதமடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் சாலைகளைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
மேலும், அளித்த உறுதிமொழியின்படி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கவிவேந்தன், ராஜேஸ்வரி மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
