Homeசெய்திகள்மாவட்டம்கட்சிப் பதவி வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடியா? – தவெக நிர்வாகி மீது ஷோரூம்...

கட்சிப் பதவி வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடியா? – தவெக நிர்வாகி மீது ஷோரூம் உரிமையாளர் புகார்; சமூக வலைதள அவதூறால் கண்ணீர் விட்டு கதறிய பெண்!

-

- Advertisement -

கட்சியில் பொறுப்பு வழங்குவதாகக் கூறி ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஷோரூமில் ரகளையில் ஈடுபட்டதுடன், தற்போது சமூக வலைதளங்களில் தங்களையும் தனது மனைவியையும் ஆபாசமாக விமர்சித்து வருவதாகவும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.கட்சிப் பதவி வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடியா? – தவெக நிர்வாகி மீது ஷோரூம் உரிமையாளர் புகார்; சமூக வலைதள அவதூறால் கண்ணீர் விட்டு கதறிய பெண்!

மேலும், ஷோரூமில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த வேடபட்டி நகரச் செயலாளர் பேண்ட் ஜிப்பை அணியாமல் அநாகரீகமாக நடந்துகொண்டதாகப் பெண் உரிமையாளர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் தனது மனைவி திவ்யாவுடன் இணைந்து இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பதவி வழங்குவதாகக் கூறி ரூ.1 லட்சம் பெற்றதாகப் புகார்!

இந்த நிலையில், தவெக வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ் என்பவர் மகாராஜனின் ஷோரூமில் பணம் கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது மகாராஜனுக்குக் கட்சியில் இளைஞரணி பொறுப்பாளர் பதவி வழங்குவதாகக் கூறி பிரகாஷ் ரூ.1 லட்சம் பெற்றதாகத் தெரிகிறது.

ஆனால், பணம் பெற்றுக்கொண்ட பிறகும் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு மகாராஜன் கேட்டுள்ளார். ஆனால், பிரகாஷ் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதற்கிடையே, பிரகாஷ் தான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் பதிவுப் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த வாகனத்தை மகாராஜனின் ஷோரூமில் ஒப்படைத்துள்ளார். ஏற்கெனவே கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்க முடியும் என மகாராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஷோரூமில் புகுந்து ரகளை செய்ததாகக் குற்றச்சாட்டு!

இந்தச் சூழலில், கடந்த 14-ஆம் தேதி பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் ஷோரூமுக்கு வந்துள்ளனர். அப்போது மகாராஜன் அங்கு இல்லாததால் அவரது மனைவி திவ்யா மட்டுமே ஷோரூமில் இருந்துள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் ஷோரூமில் இருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, அவரை ஷோரூமில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாமா என்றும், கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி பணம் பெற்றது குறித்தும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், பிரகாஷ் அங்கிருந்து வெளியேற மறுத்ததால், அங்கு நடைபெற்ற வாக்குவாதத்தைத் திவ்யா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திவ்யா மற்றும் அவரது கணவர் மகாராஜன் ஆகியோர் தவெக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பேண்ட் ஜிப் அணியாமல் அமர்ந்திருந்ததாகப் பெண் உரிமையாளர் குற்றச்சாட்டு!

தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ், தனக்கு எதிரே அமர்ந்திருந்தபோது தனது பேண்ட்டின் ஜிப்பை மூடாமல் அநாகரீகமான முறையில் இருந்ததாகத் திவ்யா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் தன்னை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கண்ணீர் மல்கப் பேசிய திவ்யா, “நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து மக்கள் பணியாற்றலாம் என்ற எண்ணத்தில்தான் எனது கணவரை ஊக்குவித்தேன். அவரும் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஆனால், அவருக்குப் பதவி வழங்குவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர்.

இந்தப் பிரச்சினைக்குப் பிறகு சமூக வலைதளங்களில் என்னையும் எனது கணவரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். உண்மை என்னவென்று தெரியாமல் என்னைக் கொச்சைப்படுத்த வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் எங்காவது சென்று எப்படியாவது பிழைத்துக் கொள்கிறோம்” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – கணவர் குற்றச்சாட்டு!

இதனைத் தொடர்ந்து பேசிய மகாராஜன், கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி தன்னிடம் பணம் பெற்றது தொடர்பாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமாரிடம் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இதுகுறித்து விசாரிக்குமாறு அறிவுறுத்தியதாகவும், தொடர்ந்து தவெக மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோரிடமும் பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், தனது புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மாறாகத் தங்களையே குற்றம்சாட்டி மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்குத் தண்டனை அனுபவிப்பதைப் போன்ற சூழல் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்த மகாராஜன், தங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதுடன் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

கோவையில் அடுத்தடுத்து எழும் புகார்கள் – தவெகவினரிடையே பரபரப்பு!

கோவையில் கடந்த வாரம் தவெக நிர்வாகி ஒருவர் பெண் நிர்வாகிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்திருந்த நிலையில், தற்போது பெண் ஷோரூம் உரிமையாளரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும், கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறிப் பணம் பெற்றதாகவும் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது.

தொடர்ந்து வெளியாகும் இத்தகைய புகார்கள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கட்சிப் பதவி வழங்குவதாகப் பணம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், பெண் உரிமையாளர் தெரிவித்துள்ள புகார்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தகாத முறையில் பேசுவதாக புகார் – தவெக மாவட்டச் செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்; அலுவலகம் பூட்டி எதிர்ப்பு!

MUST READ